பழங்களின் ராணி எது தெரியுமா? கொய்யாப்பழம் என்பதுதான் சரியான விடை என்று நிறைய பேருக்குத் தெரியாது.இப்பழத்தின் தனிப்பட்ட மணம், சுவை மற்றும் மருத்துவகுணங்களின் காரணமாக
பழங்களின் ராணி என்பதோடு சிறந்த பழம் என்ற அந்தஸ்தையும் இது பெற்றுள்ளது.
மற்ற பழங்களை ஒப்பிடும் போது இது தரத்தில் மிகுந்தும் விலையில் குறைந்தும் காணப்படுகிறது.
இது நன்றாக பழுத்தபோது இனிப்புச் சுவையுடன் வெளிப்புறம் மிருதுவாகவும்
உள்ளே வழவழப்பான மணம் மிகுந்த சதைப்பகுதியும்
கொண்டுள்ளது. இப்பழத்தின் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில்
காணப்படுகிறது.
கொய்யா
உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதல் இடம் பெறுகிறது.
கொய்யாவில் உள்ள சத்துக்கள்
கொய்யாவில் நார்சத்து, விட்டமின் எ,பி,சி,கே, தாதுப்பொருட்களான
பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், சோடியம், துத்தநாகம்
மற்றும் இரும்பு மற்றும் லைக்கோபீன், பெக்டின் ஆகியவை காணப்படுகின்றன.
மருத்துவ குணங்கள்
கொய்யாப்பழம் கிடைக்கும் பருவத்தில் இதனை தினமும் அளவோடு
உண்டால் ஆண்டுமுழுவதும் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது
என்பது கொய்யாவைப் பற்றிய மறுக்க முடியாத உண்மை.
ஏனெனில் கொய்யாவில் மருத்துவ குணங்கள் மிகுந்து உள்ளன.
சர்க்கரை நோய் குணமாக
இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடல் உட்கிரகிக்கும் சர்க்கரையின் அளவைக்
கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் இப்பழத்தினை தொடர்ந்து உண்ணும்போது 2-ம் வகை சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படுகிறது.
கண்பார்வை தெளிவாக
கொய்யா பழத்தில் விட்டமின்-ஏ சத்து அதிகமாக உள்ளது. இவ்விட்டமின் கண்
பார்வைக்கு மிகவும் நல்லது. கண்புரை மற்றும் கண்நோய்கள் போன்றவை ஏற்படாமல்
இப்பழம் தடுக்கிறது. இப்பழத்தினை தொடர்ந்து உண்பதால் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் சரிசெய்கிறது.
கான்சர் வராமல் தடுத்தல்
இப்பழத்தினை உண்பதால் கேன்சர் செல்களின் வளர்ச்சியை இது
கட்டுப்படுத்துகிறது. கொய்யா இலை, எண்ணெய் தற்கால மருந்துகளைவிட கேன்சர்
செல் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என ஆய்வு முடிவுகள்
தெரிவிக்கின்றன. இதில் உள்ள லைக்கோபீன் என்னும் ஆன்டிஆக்ஸிடென்ட் கேன்சர் செல் வளர்ச்சியைத் தடைசெய்கிறது.
இப்பழமானது ஆரஞ்சுப்பழத்தில் உள்ளதைப் போல நான்கு மடங்கு விட்டமின்
சி-யைப் பெற்றுள்ளது. இதுவே ஆண்டிஆக்ஸிடென்டை ஊக்குவிப்பவை. இவை நம்மை
கேன்சர் மற்றும் இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.
தைராய்டு நோய்க்கு
இதில் உள்ள தாதுப்பொருளான தாமிரம் தைராய்டு சுரப்பியை நன்கு செயல்பட வைக்கிறது.
மூளையின் நலத்திற்கு

இப்பழத்தில் விட்டமின் பி3 (நியாசின்) மற்றும் விட்டமின் பி6
(பைரிடாக்சின்;) ஆகியவை உள்ளன. இதில் நியாசின் நம் உடலின் இரத்த ஓட்டத்தை
சீர்செய்கிறது. பைரிடாக்சின் மூளை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு
முக்கியமானது. எனவே இப்பழத்தினை உண்பதால் நம் உடல் சீரான இரத்த ஓட்டத்தையும், புத்திகூர்மையும் பெறுகிறது.
சளி மற்றும் இருமலுக்கு
இப்பழத்தில் விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இவை சளி
மற்றும் வைரஸ் தொந்தரவில் இருந்து பாதுகாக்கிறது. கொய்யா இலையின் சாறு சளி
மற்றும் இருமலுக்கு மருந்தாகவும், தொண்டை மற்றும் நுரையீரலை நோய்
தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. கொய்யாப் பழத்தை சமைத்து அளவுக்கு அதிகமான இருமல், சளிக்கு மருந்தாகக்
கொடுக்கப்படுகிறது. சளி உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை உண்டவுடன் தண்ணீர்
அருந்தக் கூடாது. அது தொண்டை அழற்சியை ஏற்படுத்தும்.
சருமப் பாதுகாப்பு
கொய்யாவில் உள்ள விட்டமின் ஏ,பி,சி மற்றும் பொட்டாசியம் போன்றவை தோல்
சுருக்கம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுகின்றன. மேலும் தொங்கும்
சதைகளை இறுகச் செய்து பொலிவான தோற்றத்தைத் தருகின்றன.
உயர் இரத்த அழுத்தத்திற்கு
இப்பழம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ராலைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.
இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது தடைசெய்யப்படுகிறது. இதனால்
உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பினை தடைசெய்கிறது.
பல்வலிக்கு
கொய்யா இலைச்சாறு பல்வலி, ஈறுவலி மற்றும் வாய்புண்ணிற்கு மருந்தாகும்.
கொய்யா இலைச்சாற்றினை புண்களின் மீது தடவ புண்கள் விரைவில் ஆறும்.
முக்கிய மருத்துவப்பண்புகள்
- முக்கிய சிறப்பு மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுவிக்கும்.
தொடர்ந்து இப்பழத்தினைச் சாப்பிடும்போது மது அருந்தும் ஆசையை இப்பழம்
அகற்றிவிடும்.
- இதனை உண்பதால் இடைவிடாத விக்கலை நிறுத்திவிடும்.
- குடல் கோளாறுகளை
நீக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும்.
- கனிந்த கொய்யாப்பழம் சாப்பிட்டு வர
இரைப்பை வலிமை பெறும்.
- இது சிறந்த சிறுநீர் பெருக்கி. இதனைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் பச்சைத்
தண்ணீர் அருந்துவதால் சிறுநீர் நன்கு பிரியும். சிறுநீர் தாரையில் உள்ள
எரிச்சல் அடங்கும்.
- அளவுக்கு அதிகமாக கொய்யாவைச் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும். அதனால்
வாந்தி மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அளவோடு உண்ண வேண்டும்.
கொய்யாவை உண்ணும் முறை
கொய்யாப்பழத்தின் தோலில்தான் அதிக சத்து உள்ளது. உள்ளே போகப் போக சத்து
குறைவாக உள்ளது. எனவே பழத்தினை நன்கு கழுவிவிட்டு துண்டுகளாக்கி அல்லது
கடித்துச் சாப்பிடுவது நல்லது.
சாப்பிடும் முன் இப்பழத்தினை உண்ணலாம். உணவு அருந்திய உடனே உண்ணக் கூடாது. சிறிது நேரம் கழித்து உண்பது நல்லது.