Tuesday, 6 September 2016

நவீன உலகம் சிறு கதை




                   
                   பிறருக்கு உதவி செய் , நண்பர்களை வளர்த்துக்கொள் போன்ற நல்ல அறிவுகளால் வளர்த்தெடுக்கப்பட்டவன் ராபர்ட். பெற்றோர்கள் கூறியவாறே அவனும் தன் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களுக்கு உதவிவந்தான். அவன் பள்ளி வளாகத்திலுரிந்த ஆலய வாசலில் அமர்ந்து பிச்சையெடுக்கும் கால் ஊனமுற்ற சிறுவனுடன் நன்றாக பழகி வந்தான். அந்த சிறுவன் ராபர்டின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டான். ஒரு நாள் அந்த ஆலயம் வழியாக வேகமாக வந்த பேருந்து எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் மீது மோதியது. கால் நன்றாக இருந்து இருந்தால் அவன் அதிலிருந்து ஓடியிருப்பான். தனது குறைபாடுள்ள கால்களால் அவனால் ஓட முடியவில்லை. பேருந்து அவன் மீது மோத அவன் இறந்துவிட்டான். இதனை பார்த்து கொண்டிருந்த ராபர்ட் அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.
    
             காலங்கள் உருண்டோடின. ராபர்ட் வளர்ந்தான். கல்லூரியிலே தமிழ்துறை பயின்று வந்தான். வகுப்பிலே சிறந்த மாணவனாக கருதப்பட்ட ராபர்ட்டிற்கு இரவு வந்தாலே நேருடலாகவே இருக்கும். தனிமையில் மிகவும் வாடினான். கல்லூரியிலே பல போட்டிகளில் சாதனை படைத்தாலும், அவனது நெருடல் அவனில் வளர்ந்து கொண்டே இருந்தது. அவனது எண்ணங்கள் அந்த கால் ஊனமுற்ற சிறுவனை பற்றியே இருந்தது. அவனுக்கு கால் இருந்திருந்தால் அந்த விபத்திலிருந்து தப்பித்திருந்திருப்பானே என்று எண்ணினான். தனது நினைவுகளை, எண்ணங்களை கல்லூரிக்கு இரயில் வந்து கொண்டிருந்த போது தன் நண்பனிடம் கூறினான். நண்பனின் ஆறுதலான வார்த்தைகள் அவனை அவன் மனதில் ஏற்பட்ட காயத்தை போக்கவில்லை.

               ராபர்ட் அந்த எண்ணங்களை, வருத்தங்களை எப்படி கையாள்வது என்று இணையத்தில் பார்த்து கொண்டிருந்த போது, ராபர்ட்டின் அம்மா அவனுக்கு தொலைப்பேசியிலே அழைத்தார். அவரோ, ராபர்ட் நல்லா இருக்கியா? உன் நண்பர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்களா? என்று வழக்கம் போல பேசிவிட்டு ''உன்கூட இருக்கிறவங்களுக்கு உன்னால் இயன்ற உதவி செய்'' என்று தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.




               நண்பர்கள் பலம் வாய்ந்த ராபர்ட் உடல் குறைவு பெற்றவர்களுக்காக உதவிட ஒரு அமைப்பை உருவாக்கினான். அந்த அமைப்பை விரிவுப்படுத்தினான். அதில் பல இளைஞர்களை, பேராசிரியர்களை சேர்த்தான். அவனது நெருடல்கள் குறைந்து கொண்டே வந்தது. ஒரு முறை அந்த அமைப்பில் பேசிக்கொண்டிருந்த போது அவனுக்குள் எழுந்தது ஒரு ஒளி. அவன் உடல் குறைவடைந்தவர்களுக்காக இயந்திரங்கள் கண்டுபிடிக்க போவதாக கூறினான். இந்த முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு பேராசிரியரோ அவனிடம், ராபர்ட் நம்மால் இயன்ற பொருளுதவி, உணவு, இருப்பிடம், உடை இவற்றை வழங்கி வருகிறோம். இயந்திரங்களை எப்படி நம்மால் உருவாக்க இயலும் என்றார். அதற்கு ராபர்ட் என்னால் இயலும். நான் கண்டுபிடிக்கிறேன் என்று இயந்திர கல்வியை கற்க ஆரம்பித்தான்.



                அவனுக்கு தேவையான பொருள்களை உதவிகளை பெற்றிட விளைந்தான். அத்தோடு இந்த அமைப்பையும் இணையத்திலே பதிவேற்றம் செய்து பிரபலமாக்கினான். பல்வேறு பகுதிகளிலிருந்து உதவிகள் பெற்றார். அது அவனுக்கு மிகவும் உபயோகமாக அமைந்தது.


                 சில மாதங்களிலே அவனுக்குள் இருந்த உள்ளொளி உந்துதல் அவனை சாதிக்க வைத்தது. ஆம், உடல் குறைவுபட்டவர்களுக்காக இயந்திரங்கள் கண்டுபிடித்தான். அவைகள் கால் ஊனமுற்றோருக்கு நடக்க பயன்பட்டது. கை ஊனமுற்றோருக்கு பணி புரிய பயன்பட்டது. அதனால் உடல் குறைவுள்ளோரும் சமுதாயத்தில் நல்ல நிலை பெற்றனர். பிச்சையெடுத்தவர்கள் சுய தொழிலில் இறங்கினார்கள். பல சாதனைகள் புரிந்தனர்.

                 ராபர்ட் அதன் பின் இரவும் பகலும் நெருடல் இன்றி நிம்மதியாக வாழ்ந்தான். அவனது முயற்சியால் நவீன உலகை படைத்தான். அதனால் பலரும் பயன் பெற்றனர். நண்பர்கள் வட்டாரமும் விரிந்தது. கல்லூரியில் பெற்ற விருதுகளை விட, இந்த சாதனை அவனை மெய்மறக்க செய்தது.




              


   நம் எண்ணங்களால் விளைந்த நல் செயல்களால் நவீன உலகம் அமைத்திடல் வேண்டும். அது பிறருக்கும் உதவிடல் வேண்டும்.

No comments:

Post a Comment