Thursday, 8 September 2016

தூய சின்னப்பர் திருத்தலம் வரலாறு சிங்கம்பாறை


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தை சார்ந்த சிங்கம்பாறை தூய சின்னப்பர் திருத்தலத்தின் தொன்மைவாய்ந்த வரலாற்றைப் பார்ப்போம்.

  பிறப்புத் தொட்டே கிறிஸ்தவர்களாக இருந்த மூதாதையரும் சோமாபுரி என்று சொல்லப்படும் கிராமத்திலிருந்து ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வெளியேறி பனை ஏறும் தொழில் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றின் வடகரையில் வளமும் நலமும் பெற்ற முக்கூடல் அருகே உள்ள மயிலப்புரம் என்னும் சிறிய கிராமத்தில் குடியேறி வசிக்கலாயினர். அப்பகுதியில் வாழ்ந்த பிராமிணர்கள் தங்கள் விவசாய வேலைகளுக்கும், இவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த கத்தோலிக்க மக்களிடையே சிந்தனை மற்றும் எண்ணங்களில் ஏற்பட்ட ஒரு சில விரிசல்களால் எங்கள் முன்னோர்கள் மைலப்புரக்கிராமத்திலிருந்து வெளியேறி அதன் வடபகுதிக்கு இடம் பெயர்ந்தனர். அந்த வேளையில் மறைபரப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து வந்த அருட்தந்தை.பால்நாதன் அவர்களின் உதவியுடன் மைலப்புரத்தின் வடபகுதியில் , பேட்டையில் இருந்த முஸ்லிம் மதத்தை சார்ந்த நிலக்கிழார் ஒருவருக்கு சொந்தமான இடம் ஒன்றை 1845ல் வாங்கி அங்கே குடியிருந்தனர்.

     பின் வசதியான குடியிருப்பு கிடைக்கப்பட்டவுடன் தங்களுக்கென்று ஒரு சிற்றாலயம் அமைத்தனர். ஆலயத்தில் வைத்து வழிபட சொரூபம் தேவைப்பட்டது. அதே நேரம் மயிலப்புரத்தில் இருந்த தூய இராயப்பர் கோவிலை வணங்கினர். இராயப்பர் மீது பற்றும், பாசமும் கொண்ட சிங்கம்பாறை மக்கள் எப்படி சிலையை எடுத்துச் செல்வது என்று யோசித்தனர். நேரடியாக கேட்டால் கிடைக்காது ஆகவே என்ன செய்வது என்று யோசனை செய்தனர். ஆகவே இராயப்பரை இரவோடு இரவாக தமது ஊருக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் கடவுளின் திட்டமோ வேறுவிதமாக இருந்தது.

     முடிவில் அமாவாசை அன்று நடு இரவு ஊரே தூங்கும் வேளையில் மயிலப்புரம் கோவிலில் நுழைந்து அங்கிருந்த ஒரு சிரூபத்தை எடுத்து துணியில் கட்டிக்கொண்டு பயந்தபடியே அவசரம் அவசரமாக சிங்கம்பாறையை நோக்கி வந்தனர். 

     பின் அந்த துணியை விளக்கிப்பார்த்தால் அங்கே ராயப்பர் கையில் நீளமான சாவி இருந்தது. அடேங்கப்பா இராயப்பர் கையில் நீளமான சாவி என்று வெளிச்சத்தை உண்டு பண்ணி பார்க்கும் போது இது சாவியில்லையே…. அப்படியென்றால் இவர் கையில் இருப்பது வாள்…. என்று அய்யோ மோசம் போய்விட்டோமே என அவர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம் அவர்கள் தூக்கிவந்தது இராயப்பர் இல்லை, சின்னப்பர் சுரூபம். பின்னர் அதையே வைத்து வழிபட ஆரம்பித்துவிட்டனர். இவ்வாறு 1845க்கு பிறகு சிங்கம்பாறை ஆலயம் உருவானது. 1894 இந்த கால கட்டத்தில் புனித சின்னப்பரின் சிற்றாலயம் விரிவுபடுத்தப்பட்டு ஓலைக்கூரை மாற்றப்பட்டு ஓட்டுக்கூரையாக விரிவுபடுத்தப்பட்டது.

           சிங்கம்பாறை புதிய ஆலயம் கி.பி.1901 ம் ஆண்டு வரை சேந்தமரம் பங்கின் கிளைப்பங்காக இருந்து வந்தது. பின்னர் சிங்கம்பாறையானது வீரவநல்லூர் பங்குடன் இணைந்த கிளைப்பங்காக செயல்பட்டது. இப்போது இருக்கும் புனித சின்னப்பரின் திருத்தலத்திற்கான அடித்தளமானது அருட்தந்தை. கபிரியேல் அவர்களால் கி.பி 1901ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு ஆலயத்தின் கட்டுமான பணிகள் 1929ல் அருட்தந்தை குத்தூரியர் காலத்தில் நிறைவடைந்தது. இவ்வூரில் கோயில் கட்ட பலரும் உழைத்தனர். தண்ணீருக்கு பதிலாக பதநீர் கொண்டே கட்டிடம் கட்டப்பட்டது. அருட்திரு. குத்தூரியர் அடிகளார் ஏற்பாட்டாலும், மக்கள் உழைப்பாலும் ஆலயம், குருவானவர் இல்லம் மற்றும் கன்னியர் இல்லம் கட்டப்பட்டது. இதில் மற்றொரு விசேஸம் என்னவென்றால் 6 மாதம் உடலை மூலதனமாக வைத்து பனையேறும் தொழிலை செய்து வரும் இவ்வூர் மக்கள் மற்ற 6 மாதம் கோவில் பணியை சம்பளம் இல்லாமல் செய்ததுதான். இதில் கோவில் வேலையென்றால் போட்டி போட்டுக்கொண்டு நடக்கும்.



     கி.பி. 1931 ல் சிங்கம்பாறையானது தனிப்பங்காக உருவெடுத்தது. அருட்தந்தை குத்தூரியர் அடிகளார் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று செயல்பட்டார்கள். இவர் காலத்தில் தான் கல்விக்கான விதை இம்மண்ணில் ஊன்றப்பட்டது. அவர் மாணவ, மாணவிகளின் கல்விக்காக முதல் பள்ளியை துவக்கி அவரே முதல் ஆசிரியரானார். கி.பி. 1938ஆம் ஆண்டு மதுரையிலிருந்து வந்த அமலவை கன்னியர்கள் எம்பங்கின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற செயல்பாடுகளை செய்ய முன்வந்து கல்விப்பணி, சமூகப்பணி மற்றும் ஆன்மீகப் பணிகளில் முழூ மூச்சாக செயல்பட துவங்கினார்கள். வளர்ச்சியடையாத சிறு குழந்தையாக இருந்த சிங்கம்பாறை பங்கை பல்வேறு வழிகளில் சிறந்ததாய் மாற்றிய பெருமை அருட்தந்தை குத்தூரியர் அவர்களையே சாரும். அடிகளார் அருட்தந்தை டி.குரியன் சே.ச , அருட்தந்தை அந்தோணிசாமி மற்றும் அருட்தந்தை டயஸ் அடிகளார் ஆகியோர் உதவி பங்குத்தந்தையர்களாக அருட்தந்தை குத்தூரியர் சே.ச அவர்களுடன் பணியாற்றி பங்கை மேம்படுத்தினர்.
          
 

     1845ஆம் ஆண்டு சிறிய ஓலைக் குடிசையாக கருவான எமது ஆலயம் இன்று திருத்தந்தை அவர்களால் திருத்தலமாக உருப்பெற்று உயர்ந்து நிற்கிறது. பாளைமறை மாவட்டத்திலேயே, புறவினத்தாரின் அப்போஸ்தலரான தூய சின்னப்பருக்கு திருத்தலம் தந்து முந்தி நிற்கும் சிறப்பு எம்மோடு ஒட்டிக்கொண்டுள்ளது.

           தூய சின்னப்பரின் அருளால் எமது ஆலய முற்றத்தில் முத்தாய்ப்பாய் அமைந்து, புதுமைகள் கோடி புரிந்து கொண்டிருக்கும் கொடிமரத்தின் புதுமை நீர் எம் ஞானக்கண்களைத் திறந்து எமது ஆன்மீக வாழ்வினை ஆழப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment