Tuesday, 20 September 2016

கொய்யாப் பழம் - Guava fruit


பழங்களின் ராணி எது தெரியுமா? கொய்யாப்பழம் என்பதுதான் சரியான விடை என்று நிறைய பேருக்குத் தெரியாது.இப்பழத்தின் தனிப்பட்ட மணம், சுவை மற்றும் மருத்துவகுணங்களின் காரணமாக பழங்களின் ராணி என்பதோடு சிறந்த பழம் என்ற அந்தஸ்தையும் இது பெற்றுள்ளது.

மற்ற பழங்களை ஒப்பிடும் போது இது தரத்தில் மிகுந்தும் விலையில் குறைந்தும் காணப்படுகிறது.

இது நன்றாக பழுத்தபோது இனிப்புச் சுவையுடன் வெளிப்புறம் மிருதுவாகவும் உள்ளே வழவழப்பான மணம் மிகுந்த சதைப்பகுதியும் கொண்டுள்ளது. இப்பழத்தின் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
கொய்யா உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதல் இடம் பெறுகிறது.

கொய்யாவில் உள்ள சத்துக்கள்

கொய்யாவில் நார்சத்து, விட்டமின் எ,பி,சி,கே, தாதுப்பொருட்களான பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், சோடியம், துத்தநாகம் மற்றும் இரும்பு மற்றும் லைக்கோபீன், பெக்டின் ஆகியவை காணப்படுகின்றன.

மருத்துவ குணங்கள்

கொய்யாப்பழம் கிடைக்கும் பருவத்தில் இதனை தினமும் அளவோடு உண்டால் ஆண்டுமுழுவதும் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது கொய்யாவைப் பற்றிய மறுக்க முடியாத உண்மை.
ஏனெனில் கொய்யாவில் மருத்துவ குணங்கள் மிகுந்து உள்ளன.

சர்க்கரை நோய் குணமாக

இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடல் உட்கிரகிக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் இப்பழத்தினை தொடர்ந்து உண்ணும்போது 2-ம் வகை சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படுகிறது.

கண்பார்வை தெளிவாக

கொய்யா பழத்தில் விட்டமின்-ஏ சத்து அதிகமாக உள்ளது. இவ்விட்டமின் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கண்புரை மற்றும் கண்நோய்கள் போன்றவை ஏற்படாமல் இப்பழம் தடுக்கிறது. இப்பழத்தினை தொடர்ந்து உண்பதால் பார்வைக் குறைபாடு ஏற்படாமல்  சரிசெய்கிறது.

கான்சர் வராமல் தடுத்தல்

இப்பழத்தினை உண்பதால் கேன்சர் செல்களின் வளர்ச்சியை இது கட்டுப்படுத்துகிறது. கொய்யா இலை, எண்ணெய் தற்கால மருந்துகளைவிட கேன்சர் செல் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள லைக்கோபீன் என்னும் ஆன்டிஆக்ஸிடென்ட் கேன்சர் செல் வளர்ச்சியைத் தடைசெய்கிறது.
இப்பழமானது ஆரஞ்சுப்பழத்தில் உள்ளதைப் போல நான்கு மடங்கு விட்டமின் சி-யைப் பெற்றுள்ளது. இதுவே ஆண்டிஆக்ஸிடென்டை ஊக்குவிப்பவை. இவை நம்மை கேன்சர் மற்றும் இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.

தைராய்டு நோய்க்கு

இதில் உள்ள தாதுப்பொருளான தாமிரம் தைராய்டு சுரப்பியை நன்கு செயல்பட வைக்கிறது.

மூளையின் நலத்திற்கு

இப்பழத்தில் விட்டமின் பி3 (நியாசின்) மற்றும் விட்டமின் பி6 (பைரிடாக்சின்;) ஆகியவை உள்ளன. இதில் நியாசின் நம் உடலின் இரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. பைரிடாக்சின் மூளை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது. எனவே இப்பழத்தினை உண்பதால் நம் உடல் சீரான இரத்த ஓட்டத்தையும், புத்திகூர்மையும் பெறுகிறது.

சளி மற்றும் இருமலுக்கு

இப்பழத்தில் விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இவை சளி மற்றும் வைரஸ் தொந்தரவில் இருந்து பாதுகாக்கிறது. கொய்யா இலையின் சாறு சளி மற்றும் இருமலுக்கு மருந்தாகவும், தொண்டை மற்றும் நுரையீரலை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. கொய்யாப் பழத்தை சமைத்து அளவுக்கு அதிகமான இருமல், சளிக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. சளி உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை உண்டவுடன் தண்ணீர் அருந்தக் கூடாது. அது தொண்டை அழற்சியை ஏற்படுத்தும்.

சருமப் பாதுகாப்பு

கொய்யாவில் உள்ள விட்டமின் ஏ,பி,சி மற்றும் பொட்டாசியம் போன்றவை தோல் சுருக்கம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுகின்றன. மேலும் தொங்கும் சதைகளை இறுகச் செய்து பொலிவான தோற்றத்தைத் தருகின்றன.

உயர் இரத்த அழுத்தத்திற்கு

இப்பழம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ராலைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது தடைசெய்யப்படுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பினை தடைசெய்கிறது.

பல்வலிக்கு

கொய்யா இலைச்சாறு பல்வலி, ஈறுவலி மற்றும் வாய்புண்ணிற்கு மருந்தாகும். கொய்யா இலைச்சாற்றினை புண்களின் மீது தடவ புண்கள் விரைவில் ஆறும்.

முக்கிய மருத்துவப்பண்புகள்

  •  முக்கிய சிறப்பு மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுவிக்கும். தொடர்ந்து இப்பழத்தினைச் சாப்பிடும்போது மது அருந்தும் ஆசையை இப்பழம் அகற்றிவிடும். 
  • இதனை உண்பதால் இடைவிடாத விக்கலை நிறுத்திவிடும். 
  • குடல் கோளாறுகளை நீக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும். 
  • கனிந்த கொய்யாப்பழம் சாப்பிட்டு வர இரைப்பை வலிமை பெறும்.
  • இது சிறந்த சிறுநீர் பெருக்கி. இதனைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் பச்சைத் தண்ணீர் அருந்துவதால் சிறுநீர் நன்கு பிரியும். சிறுநீர் தாரையில் உள்ள எரிச்சல் அடங்கும்.
  • அளவுக்கு அதிகமாக கொய்யாவைச் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும். அதனால் வாந்தி மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அளவோடு உண்ண வேண்டும்.

கொய்யாவை உண்ணும் முறை

கொய்யாப்பழத்தின் தோலில்தான் அதிக சத்து உள்ளது. உள்ளே போகப் போக சத்து குறைவாக உள்ளது. எனவே பழத்தினை நன்கு கழுவிவிட்டு துண்டுகளாக்கி அல்லது கடித்துச் சாப்பிடுவது நல்லது.
சாப்பிடும் முன் இப்பழத்தினை உண்ணலாம். உணவு அருந்திய உடனே உண்ணக் கூடாது. சிறிது நேரம் கழித்து உண்பது நல்லது.

Monday, 12 September 2016

எனது பிச்சை...













மற்றவர்களின் கையை
எதிர்பார்த்திருந்த நான்
மற்றவர்கள் என்
கையை எதிர்பார்க்க
ஆசைக் கொள்ளவில்லை
எதிர்பார்க்காமல்
எதிர்பாராத சமயம்
எதிர்பாராத விதமாய்
இடக்கைக்கு தெரியாமல்
கொடுக்கத்தான் ஆசை,
ஆனால் அதற்கு, என்கை
இன்னும் கீழே தான் இருக்கிறது
மேலிருக்கும் கையை நோக்கியவாறு….



Thursday, 8 September 2016

தூய சின்னப்பர் திருத்தலம் வரலாறு சிங்கம்பாறை


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தை சார்ந்த சிங்கம்பாறை தூய சின்னப்பர் திருத்தலத்தின் தொன்மைவாய்ந்த வரலாற்றைப் பார்ப்போம்.

  பிறப்புத் தொட்டே கிறிஸ்தவர்களாக இருந்த மூதாதையரும் சோமாபுரி என்று சொல்லப்படும் கிராமத்திலிருந்து ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வெளியேறி பனை ஏறும் தொழில் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றின் வடகரையில் வளமும் நலமும் பெற்ற முக்கூடல் அருகே உள்ள மயிலப்புரம் என்னும் சிறிய கிராமத்தில் குடியேறி வசிக்கலாயினர். அப்பகுதியில் வாழ்ந்த பிராமிணர்கள் தங்கள் விவசாய வேலைகளுக்கும், இவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த கத்தோலிக்க மக்களிடையே சிந்தனை மற்றும் எண்ணங்களில் ஏற்பட்ட ஒரு சில விரிசல்களால் எங்கள் முன்னோர்கள் மைலப்புரக்கிராமத்திலிருந்து வெளியேறி அதன் வடபகுதிக்கு இடம் பெயர்ந்தனர். அந்த வேளையில் மறைபரப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து வந்த அருட்தந்தை.பால்நாதன் அவர்களின் உதவியுடன் மைலப்புரத்தின் வடபகுதியில் , பேட்டையில் இருந்த முஸ்லிம் மதத்தை சார்ந்த நிலக்கிழார் ஒருவருக்கு சொந்தமான இடம் ஒன்றை 1845ல் வாங்கி அங்கே குடியிருந்தனர்.

     பின் வசதியான குடியிருப்பு கிடைக்கப்பட்டவுடன் தங்களுக்கென்று ஒரு சிற்றாலயம் அமைத்தனர். ஆலயத்தில் வைத்து வழிபட சொரூபம் தேவைப்பட்டது. அதே நேரம் மயிலப்புரத்தில் இருந்த தூய இராயப்பர் கோவிலை வணங்கினர். இராயப்பர் மீது பற்றும், பாசமும் கொண்ட சிங்கம்பாறை மக்கள் எப்படி சிலையை எடுத்துச் செல்வது என்று யோசித்தனர். நேரடியாக கேட்டால் கிடைக்காது ஆகவே என்ன செய்வது என்று யோசனை செய்தனர். ஆகவே இராயப்பரை இரவோடு இரவாக தமது ஊருக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் கடவுளின் திட்டமோ வேறுவிதமாக இருந்தது.

     முடிவில் அமாவாசை அன்று நடு இரவு ஊரே தூங்கும் வேளையில் மயிலப்புரம் கோவிலில் நுழைந்து அங்கிருந்த ஒரு சிரூபத்தை எடுத்து துணியில் கட்டிக்கொண்டு பயந்தபடியே அவசரம் அவசரமாக சிங்கம்பாறையை நோக்கி வந்தனர். 

     பின் அந்த துணியை விளக்கிப்பார்த்தால் அங்கே ராயப்பர் கையில் நீளமான சாவி இருந்தது. அடேங்கப்பா இராயப்பர் கையில் நீளமான சாவி என்று வெளிச்சத்தை உண்டு பண்ணி பார்க்கும் போது இது சாவியில்லையே…. அப்படியென்றால் இவர் கையில் இருப்பது வாள்…. என்று அய்யோ மோசம் போய்விட்டோமே என அவர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம் அவர்கள் தூக்கிவந்தது இராயப்பர் இல்லை, சின்னப்பர் சுரூபம். பின்னர் அதையே வைத்து வழிபட ஆரம்பித்துவிட்டனர். இவ்வாறு 1845க்கு பிறகு சிங்கம்பாறை ஆலயம் உருவானது. 1894 இந்த கால கட்டத்தில் புனித சின்னப்பரின் சிற்றாலயம் விரிவுபடுத்தப்பட்டு ஓலைக்கூரை மாற்றப்பட்டு ஓட்டுக்கூரையாக விரிவுபடுத்தப்பட்டது.

           சிங்கம்பாறை புதிய ஆலயம் கி.பி.1901 ம் ஆண்டு வரை சேந்தமரம் பங்கின் கிளைப்பங்காக இருந்து வந்தது. பின்னர் சிங்கம்பாறையானது வீரவநல்லூர் பங்குடன் இணைந்த கிளைப்பங்காக செயல்பட்டது. இப்போது இருக்கும் புனித சின்னப்பரின் திருத்தலத்திற்கான அடித்தளமானது அருட்தந்தை. கபிரியேல் அவர்களால் கி.பி 1901ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு ஆலயத்தின் கட்டுமான பணிகள் 1929ல் அருட்தந்தை குத்தூரியர் காலத்தில் நிறைவடைந்தது. இவ்வூரில் கோயில் கட்ட பலரும் உழைத்தனர். தண்ணீருக்கு பதிலாக பதநீர் கொண்டே கட்டிடம் கட்டப்பட்டது. அருட்திரு. குத்தூரியர் அடிகளார் ஏற்பாட்டாலும், மக்கள் உழைப்பாலும் ஆலயம், குருவானவர் இல்லம் மற்றும் கன்னியர் இல்லம் கட்டப்பட்டது. இதில் மற்றொரு விசேஸம் என்னவென்றால் 6 மாதம் உடலை மூலதனமாக வைத்து பனையேறும் தொழிலை செய்து வரும் இவ்வூர் மக்கள் மற்ற 6 மாதம் கோவில் பணியை சம்பளம் இல்லாமல் செய்ததுதான். இதில் கோவில் வேலையென்றால் போட்டி போட்டுக்கொண்டு நடக்கும்.



     கி.பி. 1931 ல் சிங்கம்பாறையானது தனிப்பங்காக உருவெடுத்தது. அருட்தந்தை குத்தூரியர் அடிகளார் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று செயல்பட்டார்கள். இவர் காலத்தில் தான் கல்விக்கான விதை இம்மண்ணில் ஊன்றப்பட்டது. அவர் மாணவ, மாணவிகளின் கல்விக்காக முதல் பள்ளியை துவக்கி அவரே முதல் ஆசிரியரானார். கி.பி. 1938ஆம் ஆண்டு மதுரையிலிருந்து வந்த அமலவை கன்னியர்கள் எம்பங்கின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற செயல்பாடுகளை செய்ய முன்வந்து கல்விப்பணி, சமூகப்பணி மற்றும் ஆன்மீகப் பணிகளில் முழூ மூச்சாக செயல்பட துவங்கினார்கள். வளர்ச்சியடையாத சிறு குழந்தையாக இருந்த சிங்கம்பாறை பங்கை பல்வேறு வழிகளில் சிறந்ததாய் மாற்றிய பெருமை அருட்தந்தை குத்தூரியர் அவர்களையே சாரும். அடிகளார் அருட்தந்தை டி.குரியன் சே.ச , அருட்தந்தை அந்தோணிசாமி மற்றும் அருட்தந்தை டயஸ் அடிகளார் ஆகியோர் உதவி பங்குத்தந்தையர்களாக அருட்தந்தை குத்தூரியர் சே.ச அவர்களுடன் பணியாற்றி பங்கை மேம்படுத்தினர்.
          
 

     1845ஆம் ஆண்டு சிறிய ஓலைக் குடிசையாக கருவான எமது ஆலயம் இன்று திருத்தந்தை அவர்களால் திருத்தலமாக உருப்பெற்று உயர்ந்து நிற்கிறது. பாளைமறை மாவட்டத்திலேயே, புறவினத்தாரின் அப்போஸ்தலரான தூய சின்னப்பருக்கு திருத்தலம் தந்து முந்தி நிற்கும் சிறப்பு எம்மோடு ஒட்டிக்கொண்டுள்ளது.

           தூய சின்னப்பரின் அருளால் எமது ஆலய முற்றத்தில் முத்தாய்ப்பாய் அமைந்து, புதுமைகள் கோடி புரிந்து கொண்டிருக்கும் கொடிமரத்தின் புதுமை நீர் எம் ஞானக்கண்களைத் திறந்து எமது ஆன்மீக வாழ்வினை ஆழப்படுத்தியுள்ளது.

Tuesday, 6 September 2016

நவீன உலகம் சிறு கதை




                   
                   பிறருக்கு உதவி செய் , நண்பர்களை வளர்த்துக்கொள் போன்ற நல்ல அறிவுகளால் வளர்த்தெடுக்கப்பட்டவன் ராபர்ட். பெற்றோர்கள் கூறியவாறே அவனும் தன் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களுக்கு உதவிவந்தான். அவன் பள்ளி வளாகத்திலுரிந்த ஆலய வாசலில் அமர்ந்து பிச்சையெடுக்கும் கால் ஊனமுற்ற சிறுவனுடன் நன்றாக பழகி வந்தான். அந்த சிறுவன் ராபர்டின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டான். ஒரு நாள் அந்த ஆலயம் வழியாக வேகமாக வந்த பேருந்து எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் மீது மோதியது. கால் நன்றாக இருந்து இருந்தால் அவன் அதிலிருந்து ஓடியிருப்பான். தனது குறைபாடுள்ள கால்களால் அவனால் ஓட முடியவில்லை. பேருந்து அவன் மீது மோத அவன் இறந்துவிட்டான். இதனை பார்த்து கொண்டிருந்த ராபர்ட் அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.
    
             காலங்கள் உருண்டோடின. ராபர்ட் வளர்ந்தான். கல்லூரியிலே தமிழ்துறை பயின்று வந்தான். வகுப்பிலே சிறந்த மாணவனாக கருதப்பட்ட ராபர்ட்டிற்கு இரவு வந்தாலே நேருடலாகவே இருக்கும். தனிமையில் மிகவும் வாடினான். கல்லூரியிலே பல போட்டிகளில் சாதனை படைத்தாலும், அவனது நெருடல் அவனில் வளர்ந்து கொண்டே இருந்தது. அவனது எண்ணங்கள் அந்த கால் ஊனமுற்ற சிறுவனை பற்றியே இருந்தது. அவனுக்கு கால் இருந்திருந்தால் அந்த விபத்திலிருந்து தப்பித்திருந்திருப்பானே என்று எண்ணினான். தனது நினைவுகளை, எண்ணங்களை கல்லூரிக்கு இரயில் வந்து கொண்டிருந்த போது தன் நண்பனிடம் கூறினான். நண்பனின் ஆறுதலான வார்த்தைகள் அவனை அவன் மனதில் ஏற்பட்ட காயத்தை போக்கவில்லை.

               ராபர்ட் அந்த எண்ணங்களை, வருத்தங்களை எப்படி கையாள்வது என்று இணையத்தில் பார்த்து கொண்டிருந்த போது, ராபர்ட்டின் அம்மா அவனுக்கு தொலைப்பேசியிலே அழைத்தார். அவரோ, ராபர்ட் நல்லா இருக்கியா? உன் நண்பர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்களா? என்று வழக்கம் போல பேசிவிட்டு ''உன்கூட இருக்கிறவங்களுக்கு உன்னால் இயன்ற உதவி செய்'' என்று தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.




               நண்பர்கள் பலம் வாய்ந்த ராபர்ட் உடல் குறைவு பெற்றவர்களுக்காக உதவிட ஒரு அமைப்பை உருவாக்கினான். அந்த அமைப்பை விரிவுப்படுத்தினான். அதில் பல இளைஞர்களை, பேராசிரியர்களை சேர்த்தான். அவனது நெருடல்கள் குறைந்து கொண்டே வந்தது. ஒரு முறை அந்த அமைப்பில் பேசிக்கொண்டிருந்த போது அவனுக்குள் எழுந்தது ஒரு ஒளி. அவன் உடல் குறைவடைந்தவர்களுக்காக இயந்திரங்கள் கண்டுபிடிக்க போவதாக கூறினான். இந்த முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு பேராசிரியரோ அவனிடம், ராபர்ட் நம்மால் இயன்ற பொருளுதவி, உணவு, இருப்பிடம், உடை இவற்றை வழங்கி வருகிறோம். இயந்திரங்களை எப்படி நம்மால் உருவாக்க இயலும் என்றார். அதற்கு ராபர்ட் என்னால் இயலும். நான் கண்டுபிடிக்கிறேன் என்று இயந்திர கல்வியை கற்க ஆரம்பித்தான்.



                அவனுக்கு தேவையான பொருள்களை உதவிகளை பெற்றிட விளைந்தான். அத்தோடு இந்த அமைப்பையும் இணையத்திலே பதிவேற்றம் செய்து பிரபலமாக்கினான். பல்வேறு பகுதிகளிலிருந்து உதவிகள் பெற்றார். அது அவனுக்கு மிகவும் உபயோகமாக அமைந்தது.


                 சில மாதங்களிலே அவனுக்குள் இருந்த உள்ளொளி உந்துதல் அவனை சாதிக்க வைத்தது. ஆம், உடல் குறைவுபட்டவர்களுக்காக இயந்திரங்கள் கண்டுபிடித்தான். அவைகள் கால் ஊனமுற்றோருக்கு நடக்க பயன்பட்டது. கை ஊனமுற்றோருக்கு பணி புரிய பயன்பட்டது. அதனால் உடல் குறைவுள்ளோரும் சமுதாயத்தில் நல்ல நிலை பெற்றனர். பிச்சையெடுத்தவர்கள் சுய தொழிலில் இறங்கினார்கள். பல சாதனைகள் புரிந்தனர்.

                 ராபர்ட் அதன் பின் இரவும் பகலும் நெருடல் இன்றி நிம்மதியாக வாழ்ந்தான். அவனது முயற்சியால் நவீன உலகை படைத்தான். அதனால் பலரும் பயன் பெற்றனர். நண்பர்கள் வட்டாரமும் விரிந்தது. கல்லூரியில் பெற்ற விருதுகளை விட, இந்த சாதனை அவனை மெய்மறக்க செய்தது.




              


   நம் எண்ணங்களால் விளைந்த நல் செயல்களால் நவீன உலகம் அமைத்திடல் வேண்டும். அது பிறருக்கும் உதவிடல் வேண்டும்.

Monday, 8 August 2016

அப்பா – திரைவிமர்சனம்


இயக்கம்: சமுத்திரக்கனி
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் ம. நாதன்
படத்தொகுப்பு: ஏ.ம். ரமேஸ்

             பிள்ளைகளின் எதிர்காலம் அவர்கள் படிக்கும் பள்ளியில் இல்லை. பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது…. குழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கும் உண்டு… என்பது தான் சமுத்திரக்கனியின் எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் தரமான, தேவையான தமிழ் படம் “ அப்பா ”.
பிறந்தது முதல் விடலை பருவம் வரை குழந்தைகள் சந்திக்கும் சோதனைகள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் சமுத்திரக்கனி ஒரு அப்பாவாக நின்று தீர்த்து வைப்பதுடன் குழந்தையின் திறமையை கண்டறிந்து அவனை சாதிக்க வைக்கிறார். இப்புடியும் குழந்தைகளை நல் வழியில் வளர்க்களாம் என வாழ்ந்து காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி. நாளு பேருடைய பேச்சுக்காக வாழாமல் திறமைகளை வளர்த்து சாதனை படை என்றும் சமுகத்திற்கு கல்வி விசயத்தில் தன்னால் ஆன கருத்துக்களையும் கொடுத்துள்ளார்.

             தம்பி ராமையாவின் நடிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தன் ஆசை, கனவு , இலட்சியம் எல்லாவற்றையும் மகன் மீது தினித்து அவனை அமெரிக்க வாழ் மருத்துவராக்க நினைப்பது முதல் இறுதியில் தன் மகனின் நிலை அறிந்ததும் தடுமாறி போகும் தம்பி ராமைய்யா சபாஸ்.
சமுத்திரக்கனிக்கு மகனாக வரும் காக்கா முட்டை விக்னேஸ் , அப்பாவுக்கு ஏத்த பிள்ளையாக வரும் ராகவ் , யுவ லட்சுமி , கேபரில்லா , தன் சாதனையால் உயரம் அடயும் நசாத் என எல்லாரும் அழகு மற்றும் சரியான தேர்வு.

            காசு பறிக்கும் கல்வி முறை பற்றியும், அவர்கள் பெற்றோர்களை ஈர்க்கும் முறை பற்றியும் விளக்கும் சவாலான துணிச்சல் சமுத்திரக்கனிக்கு.

           எதிர் பாலினம் பற்றிய புரிதலை மகனுக்கு கொடுக்கும் விதம் அமர்க்களம்.

           திருநங்கை பற்றிய நேர்மறை எண்ணம் சபாஸ்.

           குழந்தை பிறப்பின் போதும், மனைவி திருந்தி வீடு வரும் போதும் செடி நடுகின்ற காட்சியை அமைத்தது அருமை.

            நெஞ்சை நிறைக்கும் வசனங்கள், சமுதாயத்திற்கு சவால்விடும் வசனங்கள் சமுத்திரக்கனியின் படத்தில் சாதனையே.
            எதையெல்லாம் அப்பாட்ட வந்து சொல்ல முடியுமோ அதையெல்லாம் செய், செல்ல முடியாதத செய்யாத…

           விவசாய நாடாகிய நம்ம நாட்டுல காப்பாற்றபட வேண்டிய கட்டாயத்தில இருப்பபது விவசாயம்தான்…..

           பொறந்த வீட்டுல அதிகாரம் பண்றதெல்லாம் புருசன் வீட்டுல கவுரமா வாழற வரைக்கும் தான்…

          நீ ( கவர்மெண்ட் ஸ்கூல் மாணவன் ) நாட்டுக்கோழி, தனியார் பள்ளியில் படிக்குற மாணவன் பிராய்லர் கோழி…

         உங்கள் வழியாக இந்த உலகிற்கு வந்த புனித ஆத்மாக்களை வளர்க்காதீர்கள், உயர்த்துங்கள்… போன்ற அர்த்தம் பொதிந்த வசனங்கள் பலே…

         மொத்தத்தில் அப்பா திரைப்படம் ஒரு சாதனை. கடிவாழம் போடப்பட்டிருக்கும் சமுகத்திற்கு தேவையான சாதனை … குடும்பத்தோடு கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்…..