Saturday, 26 December 2015

கிறிஸ்துமஸ் செய்தி

உலகத்தையே படைத்தாளும் இறைவன் தன் மக்களுக்காக மனிதருள் மனிதராக இம்மண்ணுலகில் பிறந்தார் என்று பெரியவர்கள் கூற கேட்டிருக்கிறோம் அல்லது வாசித்திருப்போம். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இறைமகன் மாட்டுத்தொழுவத்தில் எளிமையாக ஒரு ஏழையாக பிறந்தார். இன்று அவர் பிறப்பதற்கு அந்த மாட்டுத்தொழுவம் கூட எளிமையாக இல்லை. அதற்காக அவர் பிறக்காமல் இல்லை.

இயேசு என்று பிறந்தார்? என்று கேட்டால் அனைவரும் டிசம்பர் 25ம் தேதி இயேசு பிறந்தார் என்போம். ஆனால் இயேசு ஏற்கனவே (இம்மாத தொடக்கத்திலே) பிறந்துவிட்டார்.ஆம், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னார்வத்தோடு ஓடி ஓடி உழைத்த ஒவ்வொரு மனிதருள்ளும் இயேசு ஏற்கெனவே பிறந்துவிட்டார்.

Credit Card, Pan Card, Car, Bike, Job- என்று சொகுசாக இருந்தவர்கள் இட்லிக்காகவும் Bread- க்காகவும் கையேந்தும் சூழல். Well Settle- ­­­­­­என்று மாருதட்டி கொண்டவர்கள் ஹெலிகாப்டர்களையும் படகுகளையும் பார்க்கும்போது நெஞ்சுக்குழியிலிருந்து குரல் எழுப்பும் சூழல்.சென்னையில என்ன இல்ல? எல்லாமே இருக்கு என்று படிப்பை முடித்தவுடன் வேலைக்காக சென்னை சென்ற அனைவரும் இப்போது ஒதுங்க இடம் கிடைக்காதா என தவிக்கும் சூழல்.

இந்த சூழ்நிலைகளிலே மாபரன் இயேசு பிறக்கிறார். சென்னைவாசிகளை காப்பாற்ற உணவு பொருள்கள் வழங்க, உடைகள், மருந்து வசதி என்று தன்னார்வத்தோடு பல இளைஞர்கள் களம் இறங்கினார்கள். பல்வேறு உயிர்களை காப்பாற்றினார்கள். அங்கே அவர்களுக்குள்ளே இயேசு பிறந்திருக்கிறார். தன்னார்வத்தோடு உடல் உழைப்பு செய்தவர்கள், பல்வேறு வழிகளில் உணவு உடை வழங்கிய அனைவரினுள்ளும் அவர் பிறந்துள்ளார். பல தடைகளையும் உடைத்து அவர் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்து கொண்டுள்ளார், ஜாதி மதமின்றி ஏழை பணக்காரரின்றி, உயர்ந்தவர் தாழ்ந்தவரின்றி எல்லாரையும் மீட்டுள்ளார், எல்லாரையும் காப்பாற்றியுள்ளார்.

படைப்பிலே சிறந்த படைப்பாகிய நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தியுள்ளார். இதைத் தான் திருவிவிலியம் கூட அழகாக நமக்கு எடுத்துரைக்கிறது. மத்தேயு 16:26 ல் “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கி கொண்டாலும் தன் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதை கொடுப்பார்?

என்ன வேண்டும்? நமக்கு என்ன வேண்டும்? வாழ்வின் ஆதாரத்தை விட்டுவிட்டு நுனிப்புல்லை மேயும் பசுவை போல இருக்கிறோம். நம் ஆன்மாவை பலப்படுத்த என்ன செய்வது? பிறருக்கு கடினமான நேரத்தில் கேட்காமல் உதவி செய்தல் வேண்டும். அது பொருளாதார உதவி என்று மட்டும் இல்லை. அரவணைத்தல், அன்பு காட்டல், உடனிருத்தல் என்று கூட இருக்கலாம்.

எப்போதெல்லாம் பிறரின் கடினதருணத்தில் உதவி செய்ய முற்படுகிறோமோ அப்போதொல்லாம் நாம் ஆன்மாவை பலப்படுத்துகிறோம். அப்போதொல்லாம் இயேசு பிறக்கிறார்.

இறை இரக்கத்தின் ஆண்டில் பயணித்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் நம் இரக்கச் செயலால் இயேசுவை இம்மண்ணுலகில் பிறக்கச் செய்வோம், இறை இரக்கத்தின் தூதுவர்களாவோம். சென்னையில் தன்னார்வத்தோடு உதவி செய்து விண்ணக இயேசு கிறிஸ்துவை மண்ணகம் கொண்டுவந்த அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் எனது நன்றி. அவர்களை மையப்படுத்தியே எனது கல்லூரி விடுதியில் குடில் செய்தோம்.

ஆம் இறை இரக்கத்தால் பிறக்கின்ற இயேசுவின் குடிலை தயாரித்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். எனது வாழ்வின் இரக்கச்செயல்களின் தரத்தினை ஆராய உதவி செய்தது. ஆக, இரக்கச் செயல்கள் புரிவோம்;இந்த கிறிஸ்துமஸை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்…

No comments:

Post a Comment