Tuesday, 29 December 2015

புத்தாண்டு தீர்மானம்


             பெரியவங்க வழக்கமா சொல்லுவாங்க… புது வருசம் பிறக்கும் போது ஏதாவது ஒரு கெட்டப்பழக்கத்த விடனும்னும் அதுமட்டும்ல்ல ஏதாவது ஒரு நல்ல பழக்கத்தை கத்துக்கிடனும்னு சொல்லுவங்க…என்னப்பா… அப்புடி என்ன கெட்ட பழக்கம் எண்ட இருக்குன்னு யோசிச்சிக்கிட்டே இருக்கீங்களா? அது சின்ன விசயமாக கூட இருக்கலாம்? இல்ல ரொம்ப சாதாரணமான விசயமாக கூட இருக்கலாம்.

             நம்ம உடலுக்கு மனசுக்கு மட்டும் இல்ல, நம்ம பழக்கத்தால குடும்பம், இயற்கை, சமுகம் ஏன் நம்ம நாட்டு அரசியல கூட மாத்தகூட சக்தி நம்முடைய பழக்கவழக்கத்துக்கு உண்டுன்னு சொன்னா உங்களால நம்பமுடிதா? நம்ம பழக்கவழக்கங்கள் இப்புடிகூட இருக்கலாம்…

பிளாஸ்டிக்:

         2,3 நாளுள நாம கிலோகணக்குல பிளாஸ்டிக் உபயோகிக்கிறது உங்களுக்கு தெரியுமா? 3ரூ ,2ரூபான்னு வாங்குற பேனா கூட பிளாஸ்டிக்தான். மளிகை கடைக்கு போய்ட்டு பொருள்களை கொண்டுவர கடைகாரண்ட சண்டபோட்டு வாங்குற பைகூட பிளாஸ்டிக்தான். கடைல டீ , காபி குடிக்கிறதும் இப்ப பிளாஸ்டிக் கப்புதான் .ஜவுளி கடை ,மருந்துக்கடை, ஹோட்டல்னு போனா பிளாஸ்டிக்தான… தவிர்க்கமுடியாத பொருள்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தலாம் ஆனால் மாற்று வழிகள் இருந்தும் அதிகமாக பிளாஸ்டிக் பயன்படுத்துகிறோம் என்பதை சிறிது யோசித்தால் புரியும்…

உள்நாட்டு பொருள்கள்:

            உணவு,உடை என்று வெளிநாட்டு மோகத்தில் மிதந்துகொண்டிருக்கும் நாம் நிச்சயம் இதை பற்றி சிந்திக்கவேண்டும். ஒரு வெளிநாட்டு உணவு பொருளையோ உடையையோ வாங்குவதால் எத்தனையோ உள்நாட்டு பொருள்கள் முடக்கப்படுகிறது. அதனால் எத்தனையோ குடும்பங்களில் உணவு இல்லாமல் போகிறது. ஒருமுறை சூப்பர்மார்கெட் சென்று பொருள்வாங்கும் நம்மால் மளிகை கடை, காய்கறி கடை, ஹோட்டல், மொபைல் கடை, மொபைல் ரீசார் கடை, பூக்கடை என்று இன்னும் பல நம் ஊர்மக்கள் வைத்திருக்கும் குடிசை தொழில்கள் பாதிப்படைவதை அறிந்திருக்கிறோமா? தாகம் வந்த உடனே ஒரு வாட்டர் கேன் வாங்குகிறோம், அதற்கு பின்னால் எத்தனை மாவட்டங்களின் சுற்று சூழல் பாதிக்கப்படுகிறது என தெரியுமா?

சிறு நடை போடுவோம்:

           காலையிலும் மாலையிலும் உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் வியாதியை போக்கவோ நடக்கிறோமே அதை ஏன் தொடர்ந்து செய்யகூடாது. அல்லது நடக்குறதுக்குன்னு ஏன் நேரம் ஒதுக்கவேண்டும்? கொஞ்சம் நம்ம இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை விட்டு இறங்குவோம். சிறு நடை போடுவோம். நம்ம உடலுக்கு மட்டுமல்ல சுற்றுசூழலும் நல்லா இருக்கும்.

மின்சாரம்:

        இலவசமா கிடைக்கிற சூரிய சக்திய பயன்படுத்தி உங்க பர்ச பெரிசாக்குங்க… தேவைப்படுகிற இடத்துல மட்டும் மின்விளக்குகளை பயன்படுத்தினால் பண சேமிப்பு சாத்தியம் தான…

புகை நமக்கு பகை:

            இயற்கையை பாதிப்புள்ளாக்குபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சனைதான். உடல் நலனுக்கு கேடுன்னு எங்க பார்த்தாலும் எழுதி ஒட்டிருக்காங்க ஆனா எங்க திரும்பினாலும் ஒரே புகையாதான் இருக்கு. வாகன புகை, தொழிற்சாலை புகை, ஹோட்டல் புகை, சிகரெட் புகைன்னு எல்லாத்தையும் குறைப்போம்.

 

நல்லத குடிப்போம்:

           நம்ம ஊர்ல குடிக்கிறதுக்கு பஞ்சமே இல்ல. அரசாங்கமே குடிப்பதை ஆதரிக்கிற சூழலில் நாம் வாழுகிறோம். சரி அதவிடுங்க… குடிபோதையால் வருகிற தீமையை பற்றி நிறைய தெரிஞ்சவங்கதான் நாம். புதுசா ஒன்னுமில்லை. ஆனாலும் அதவிட்டு வெளியே வர முடியலையா? குடிக்கனும்னு தோனும்போதெல்லாம் சின்ன பிள்ளைகள் கூடபோயி அவங்ககூட விளையாடலாம் அல்லது காமெடி பாக்கலாம். குடிப்போம் நல்லதையே குடிப்போம்.

வாசிப்போம்:

           புத்தகத்திற்காக செலவிடுவது வீண்ணாகாது. மகிழ்ச்சியான வாழ்க்கை வாழனும்னா நிறைய புத்தகங்களை வாசிப்போம்… வாழ்க்கை வளமானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதைப் போல இன்னும் நிறைய பழக்கங்களை நாம் கொண்டிருக்கிறோம்… அவற்றையெல்லாம் இனங்கண்டு களை எடுப்போம். புதிய ஆண்டு நம்மை புதிப்பிக்கட்டும்… புது மனிதர்களாவோம்…

முதலில் நம்மை மாற்றுவோம், சமுதாயம் தானாக மாறும் ஏன்னா நாமதான் சமுதாயம்...

Saturday, 26 December 2015

கிறிஸ்துமஸ் செய்தி

உலகத்தையே படைத்தாளும் இறைவன் தன் மக்களுக்காக மனிதருள் மனிதராக இம்மண்ணுலகில் பிறந்தார் என்று பெரியவர்கள் கூற கேட்டிருக்கிறோம் அல்லது வாசித்திருப்போம். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இறைமகன் மாட்டுத்தொழுவத்தில் எளிமையாக ஒரு ஏழையாக பிறந்தார். இன்று அவர் பிறப்பதற்கு அந்த மாட்டுத்தொழுவம் கூட எளிமையாக இல்லை. அதற்காக அவர் பிறக்காமல் இல்லை.

இயேசு என்று பிறந்தார்? என்று கேட்டால் அனைவரும் டிசம்பர் 25ம் தேதி இயேசு பிறந்தார் என்போம். ஆனால் இயேசு ஏற்கனவே (இம்மாத தொடக்கத்திலே) பிறந்துவிட்டார்.ஆம், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னார்வத்தோடு ஓடி ஓடி உழைத்த ஒவ்வொரு மனிதருள்ளும் இயேசு ஏற்கெனவே பிறந்துவிட்டார்.

Credit Card, Pan Card, Car, Bike, Job- என்று சொகுசாக இருந்தவர்கள் இட்லிக்காகவும் Bread- க்காகவும் கையேந்தும் சூழல். Well Settle- ­­­­­­என்று மாருதட்டி கொண்டவர்கள் ஹெலிகாப்டர்களையும் படகுகளையும் பார்க்கும்போது நெஞ்சுக்குழியிலிருந்து குரல் எழுப்பும் சூழல்.சென்னையில என்ன இல்ல? எல்லாமே இருக்கு என்று படிப்பை முடித்தவுடன் வேலைக்காக சென்னை சென்ற அனைவரும் இப்போது ஒதுங்க இடம் கிடைக்காதா என தவிக்கும் சூழல்.

இந்த சூழ்நிலைகளிலே மாபரன் இயேசு பிறக்கிறார். சென்னைவாசிகளை காப்பாற்ற உணவு பொருள்கள் வழங்க, உடைகள், மருந்து வசதி என்று தன்னார்வத்தோடு பல இளைஞர்கள் களம் இறங்கினார்கள். பல்வேறு உயிர்களை காப்பாற்றினார்கள். அங்கே அவர்களுக்குள்ளே இயேசு பிறந்திருக்கிறார். தன்னார்வத்தோடு உடல் உழைப்பு செய்தவர்கள், பல்வேறு வழிகளில் உணவு உடை வழங்கிய அனைவரினுள்ளும் அவர் பிறந்துள்ளார். பல தடைகளையும் உடைத்து அவர் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்து கொண்டுள்ளார், ஜாதி மதமின்றி ஏழை பணக்காரரின்றி, உயர்ந்தவர் தாழ்ந்தவரின்றி எல்லாரையும் மீட்டுள்ளார், எல்லாரையும் காப்பாற்றியுள்ளார்.

படைப்பிலே சிறந்த படைப்பாகிய நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தியுள்ளார். இதைத் தான் திருவிவிலியம் கூட அழகாக நமக்கு எடுத்துரைக்கிறது. மத்தேயு 16:26 ல் “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கி கொண்டாலும் தன் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதை கொடுப்பார்?

என்ன வேண்டும்? நமக்கு என்ன வேண்டும்? வாழ்வின் ஆதாரத்தை விட்டுவிட்டு நுனிப்புல்லை மேயும் பசுவை போல இருக்கிறோம். நம் ஆன்மாவை பலப்படுத்த என்ன செய்வது? பிறருக்கு கடினமான நேரத்தில் கேட்காமல் உதவி செய்தல் வேண்டும். அது பொருளாதார உதவி என்று மட்டும் இல்லை. அரவணைத்தல், அன்பு காட்டல், உடனிருத்தல் என்று கூட இருக்கலாம்.

எப்போதெல்லாம் பிறரின் கடினதருணத்தில் உதவி செய்ய முற்படுகிறோமோ அப்போதொல்லாம் நாம் ஆன்மாவை பலப்படுத்துகிறோம். அப்போதொல்லாம் இயேசு பிறக்கிறார்.

இறை இரக்கத்தின் ஆண்டில் பயணித்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் நம் இரக்கச் செயலால் இயேசுவை இம்மண்ணுலகில் பிறக்கச் செய்வோம், இறை இரக்கத்தின் தூதுவர்களாவோம். சென்னையில் தன்னார்வத்தோடு உதவி செய்து விண்ணக இயேசு கிறிஸ்துவை மண்ணகம் கொண்டுவந்த அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் எனது நன்றி. அவர்களை மையப்படுத்தியே எனது கல்லூரி விடுதியில் குடில் செய்தோம்.

ஆம் இறை இரக்கத்தால் பிறக்கின்ற இயேசுவின் குடிலை தயாரித்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். எனது வாழ்வின் இரக்கச்செயல்களின் தரத்தினை ஆராய உதவி செய்தது. ஆக, இரக்கச் செயல்கள் புரிவோம்;இந்த கிறிஸ்துமஸை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்…

தனியார் கம்பெனி பேருந்தோட...

உங்க இஸ்டத்துக்கு மாத்துரீங்க… கேக்க ஆள் இல்லைன்னு நினைசீங்கலா… இரண்டு நாளா பாத்துகிட்டு இருக்கேன்… அப்புடி என்ன வந்துச்சி் உங்களுக்கு… -என்று 48வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் தனியார் பேருந்து ஒட்னரிடம் நடுவீதியீல் சண்டை போட்டு கொண்டு இருந்தார்.

அட அந்த தனியார் கம்பெனி பேருந்தோட போதும் போதும்னு ஆகுது. எல்லா வாகனங்களுக்கும் சாலையில் குறிப்பிட்ட வேகம் உண்டு. ஆனால் இந்த தனியார் பேருந்து ஒட்டுனர்களுக்கு மட்டும் முன்னால போர பஸ்ச எப்புடியாவது முந்திரனும்’’னு பிச்சி பிடிங்கிகிட்டு நிக்கிறாங்க. குறுக்க யார் வந்தாலும் கவலையில்லை. ஆஸ்பத்திரி பகுதியோ, பள்ளி பகுதியோ, என்ற அக்கறை இல்லை பேருந்தினுள் பல உயிர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமில்லை. என்னம்மோ, அவங்க வீட்டு சொத்த களவாடிட்டு போகுறவன பிடிக்க போகிறமாதிரி வண்டி ஓட்டுகிறார்கள்.

பல நாள்கள் கவனித்தது உண்டு.சீக்கிரமா போகுறதுக்காகவேண்டி சரியான நிறுத்ததுல பயணிகள இறக்கிவிடாம முன்னாடி நிக்குற பேருந்த முந்திகிட்து வண்டிய குறுக்க விடுவாங்க… இவரும் வண்டிய எடுக்கமாட்டார், பின்னால இருக்கிறவங்களையும் வண்டிய எடுக்கவிடமாட்டார்… பயணிகளையும் சரியான இடத்துல இறக்கிவிடமாட்டார்… வண்டில எல்லா சீட்டுலயும் ஆள் இறுப்பாங்க… ஆனாலும் வண்டிய எடுக்கமாட்டங்க… வண்டி ஆக்சிலரேட்டர அலுத்திவிட்டுகிட்டே இருப்பாங்க… ஹாரன அடிச்சிகிட்டே இருப்பாங்க… வண்டில இருந்து அப்புடி ஒரு புகை வரும்… சுற்றுசூழலையும் கெடுத்துடுவாங்க… பஸ்சுக்குள்ள இருக்கிறவங்க மன ரீதியாக பாதிப்படையவும் செய்வாங்க…

இதுமட்டுமல்ல வழியில யாரு எங்க கையகாட்டி வண்டிய நிறுத்துங்கன்னு சொன்னாலும் உடனே வண்டிய நிறுத்தி ஆள் ஏத்துவாங்க… தனியார் பேருந்துகளை எல்லா இடத்துலயும் நிக்ககுடாதுன்னும் அப்புடியே நிப்பாட்டினா 2500 ரூபாய் அபராதம்னு சட்டம் போட்டதா ஒட்டுனர் சொன்னார்.ஒரு மாதம் இந்த சட்டம் அமர்களமாக போயிட்டு இருந்தது. “பழைய குருடி கதவதிறடினு சொல்லுற மாதிரி மறுபடியும் அவங்க ஆரம்பிச்சிட்டாக்க…

அதே வழிதடத்துல போகிற அரசு பஸ் ஓட்டுனரிடன் மனநிலை அப்படியே இதற்கு எதிர்பதம். அவங்க ரொம்ப எளிமையாக நடந்துகொள்வாங்க. சரியா பயணிகளை இறக்கிவிடுவாங்க. வண்டிய அதிவேகமா ஓட்டமாட்டங்க… தனியார் வண்டி வேகமா வந்தா உடனே வழிவிட்டுவிடுவாங்க..

அப்புறம் ஏன் எல்லாரும் தனியார் பேருந்துல ஏறுகிறாங்கன்னு, எனக்கு ஒரு குழப்பம். சில பேரிடம் கேட்டேன். அவங்க எல்லாரும் சொல்லுறது ஒரே மாதிரிதான் இருந்தது. விலை கொஞ்சம் குறைவு, சில்லரை பிரச்சனை அதிகம் வருவது இல்லை, நல்லா புதுபட பாட்டு போடுவாங்க…

இப்படி ஒரு சில காரணங்களால் மக்கள் இன்னும் தனியார் பேருந்தை விரும்புகிறார்கள். ஆனால் தனியார் பேருந்தினால் பயணிகள் மனரீதியான பாதிப்புகள், அதிவேகத்தால் ஏற்படும் பயம், தடினமான ஒலி எழுப்பியால் மன அழுத்தம், போட்டி மனப்பான்மை உருவாகுதல் என இன்னும் பல தீமைகள் இருப்பதை பயணிகள் அறிந்துகொள்ள வில்லை. அம்மாடியோ இதைப் பற்றி ஒரு ஆய்வை எடுத்து எனது மேற்கல்வியை முடித்துவிடலாம் போலிருக்கிறது.

என்னுடன் பயணித்த பயணி ஒருவர் கூறியது: தனியார் பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் பயணிகளைவிட அதிக பயணிகளை ஏற்றி உரிமையாளருக்கு லாபம் கொடுத்தால், ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் குறிப்பிட்ட தொகை அதிகமாக கொடுக்கிறார்களாம்.

அந்த 48வயது பெண்மனி பார்ப்பதற்கு சாந்த குணமுடையவராக இருந்தார். ஆனால் இந்த செயலால் அவர் கோபமாக நடுதெரு என்று பாராது, இரவு 8:30 மணி என்று பாராது, சாலைகள் கூடும் இடம் என்று பாராது அந்த ஓட்டுநரை திட்டினார். தனது உரிமைக்காக போராடினார். அந்த பெண்மணி வந்த பேருந்தில் கூட்டம் குறைவு என்று திடீரென்று எல்லாரையும் வேறு பேருந்திற்கு அனுப்பிவிட்டு அந்த பேருந்து திரும்பிவிட்டது. அவ்வளவு நேரம்வரை யார் முதலில் செல்வது என்று போட்டிபோட்டுகிட்டு இருந்த அவர்கள் திடீரென இப்படியொரு செயல் செய்துவிட்டனர். அந்த பெண்மணி மட்டும் திட்டிக்கொண்டு வந்தார். இப்புடி பாதியில இறக்கிவிடுறதுக்கு மொதல்லயே ஒரு பஸ்ச எடுதிறுக்கலாம்னு ஆர்ம்பித்தது…தொடர்ந்து அடுத்த பேருந்தில் ஏறி அருகில் இருந்தவர்களிடம் இதைப் பற்றி பேசி ஓட்டுனர்களை திட்ட தொடங்கினார். ஆனா கூடவந்து, வேறு பேருந்தில் ஏறியவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். சாலையில் நின்றவர்கள் எல்லாரும் பாத்துகிடேதான் இருந்தார்கள். அவ்வளவு பெரிய முக்கியமான இடத்துல ஒரு போக்குவரத்து காவல் அதிகாரியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே இருந்திருந்தாலும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீங்க…

இதுபோல் இன்னும் பல தனியார் பேருந்துகள் நடுதெருவில் கூத்து நடத்திகொண்டுதான் உள்ளது. போக்குவரத்துக்காக எவ்வளவோ தொகை பட்ஜெட்டில் ஒதுக்குகிறார்கள்… எவ்வளவோ அதிகாரிகள் பணிசெய்கிறார்கள்… எவ்வளவோ சட்டங்கள் இருக்கின்றன… இவை எல்லாம் இருந்து என்ன பயனென்று தெரியவில்லை? உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்…

Friday, 11 December 2015

இந்திய வள குளிர்பானங்கள் 2015

40% ஜீ.எஸ்.டி வரியை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். 250 கோடி அமெரிக்கடாலர் முதலீடு செய்து ஆயிரம் கோடிக்கணக்கில் தினமும் பணம் ஈட்டுகின்ற குளிர்பானக்கம்பெனிகள் பல வகைகளில் ஒவ்வொரு தமிழனையும் ஏமாற்றிவருகிறது.30 லட்சம் சில்லறை வணிகர்கள், ஆயிரக்கணக்கில் விநியோகஸ்தர்கள் பாதிப்படைவார்கள் என்று திசைதிருப்புகிறார்கள். இந்தியவளம் சுரண்டல், உடல்நலம் சீர்குளைத்தல், இந்திய குளிர்பானங்களின் முடக்கம்,சுற்றுசூழல் மாசுபாடு என்று பல சமூகபிரச்சனைகளை ஏற்படுத்துகிற குளிர்பானங்கள் இல்லாமல் இந்தியர்களால்  வாழமுடியும். அனைத்து ஊடகமும் சென்னை வெள்ளத்தை நோக்கிதிரும்பியிருக்கும் இச்சூழலில் இந்த செய்தி வெளிவருவது திட்டமிட்ட செயலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. சில அதிகாரிகள் தங்களின்  அதிகப்படியான  கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தும்முன், இந்த வரியை அரசு நிச்சயம் நடைமுறைபடுத்தவேண்டும். நாமமட்டும்  வாழ்ந்தால் போதாது நம்ம பிள்ளைகளும் வாழனும் ....