Thursday, 26 November 2015

திடீர் மனிதர்

            சில அறிகுறிகள் நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னோடியாக அமையும். சில நேரங்களில் அந்த அறிகுறிகளை நாம் அறிகிறோம்;பல நேரங்களில் அவற்றை பற்றி நாம் அறிய முற்படுவதில்லை. உதாரணமாக கனவுகளின் மூலம் நம் வாழ்கையை பற்றிய முன்னோட்டங்கள் வெளிப்படும்.சில நேரங்களில் மனிதர்களின் மூலம் வெளிப்படும். யாரோ ஒருவர் நம் வாழ்கையில் திடீரென வருவார். அவரை பற்றி நாம் யோசித்திருக்கமாட்டோம்.
இந்தமனிதர் ஏன் என் வாழ்க்கையில் வருகிறார்?
எதற்காக இவரை நான் அடிக்கடி சந்திக்கிறேன்?    இவர் யார்? என்று
             அந்த புதிய மனிதரை பற்றி நாம் அறிந்துகொள்வதில்லை. அதனாலோ என்னவாே ,அவரும் நம் வாழ்க்கையின் திசைக்காட்டி என்பதை மறந்துவிடுகிறோம். திசைக்காட்டி ஒருவரை நேர்வழியிலும் நடத்தும்;அதே சமயம் எதிர் வழியிலும் நடத்தும்.இந்த கலி காலத்தில் நேர் வழியில் நடத்தி செல்லும் திசைக்காட்டிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். திடீரென வரும் ஒருவர், நம் வாழ்க்கை பாதையை திசைதிருப்பக்கூடியவராக இருப்பார்.   
             பொதுவாக எல்லோருக்கும் ஓர் எண்ணம் உண்டு. புதிய மனிதர்களிடம் பேசும் போது தன்னை பற்றிய விபரங்களை பெறுமையுடன் கூறிவிடுகிறார். அதன்பின் பரவாயில்லையே என்னுடைய நட்பு வட்டம் பெரிதாகியுள்ளதே!! என்று நினைத்துக்கொள்வார்கள். பிறரிடம் தன்னை பற்றி பகிர்ந்து கொண்டு நட்பை பெரிதாக்குவது தவறல்ல. ஆனால் அதுஅப்படி அமைவதில்லை, அந்த திடீர் மனிதர் ஏதோ ஒரு வழியில் அடிக்கடி நம் பாதையில் குறுக்கிடுவார். நமக்கே தெரியாமல் அவரிடமிருந்து சில கொள்கைகளை, கருத்துகளை, அனுகுமுறைகளை பின்பற்றுவோம்.அது நம்முடைய இயல்பு வாழ்க்கையை அப்படியே திசைதிருப்பிவிடும். தவறான அனுகுமுறைகளால், நம் இலக்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்திக்க நேரிடும். அதனைப் பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம்.  
             இலக்கு இதுதானே; என்னால் எளிமையாக சாதிக்க இயலும்; "நான் சாதிக்க பிறந்தவன்" என்று மாறுதட்டிக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் நம் இலக்கு அங்கே இடிந்துக்கொண்டிருக்கும்.இந்த வெளிப்பாடு திடீரென குறுக்கிட்ட ஒருவராலே. இப்படி தினமும் நம் வாழ்க்கையில் பலர் குறுக்கிடும் போது, நம் இலக்கு என்னவாகும்? பலரிடமிருந்து நாம் பல கொள்கைகளை அனுகுமுறைகளை உள்வாங்குகிறோம். ஒருவராலே நம் இலக்கு சிறிது சிதைந்துவிட்டதெனில் பலரால் நம் இலக்கு நிச்சயம் உடைந்துவிடும் அல்லது தவறான இலக்காக உருமாற்றம் பெறும்.
          "கூடாநட்பு கேடாய் விளையும்"-என்பது அறிஞர்களின் அமுதவாக்கு. இன்னும் ஆழமாக கூறினால் நாம் தினமும் சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்து எண்ணங்களை(vibration) உள்வாங்குகிறோம்.  நம்மை அறியாமல் நடக்கும் இந்த செயல்கள், நாம் குறித்திருக்கும் இலக்கை சிதைத்துவிடுகிறது. சிதைந்த இலக்கை மீண்டும் சரி செய்வது எளிதான காரியமில்லை. ஆனால் முன்னதாகவே இந்த திடீர் மனிதர்களை பற்றிய தெளிவான புரிதலை கொண்டிருந்தால்  அவர்களை நம் வாழ்கையிலிருந்து களைய முடியும்: களைய வேண்டும்.நல்லது மட்டும் கற்றுக்கொள்வது கடினமானது என்றாலும், இதுதான் என்னுடைய இலக்கு, இதனை நிச்சயம் அடைவேன் என்ற உறுதிபாட்டிற்கு முன் அவை எளிமையே. ஆக எச்சரிக்கையாக இருப்போம்; திடீர் மனிதர்களால் நம் இலக்கு திசைதிரும்புவதை தடுப்போம்.

         திடீர் மனிதர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் சொல்லப்போனால்

      #  பேருந்தில் உடன் பயணிப்பவர்கள்
      #  சந்தையில் சந்திப்பவர்கள்
      #  பள்ளியில் உடன் பணிபுரிபவர்கள்
      #  கல்லூரியல் உடன் பணிபுரிபவர்கள்
      #  உடன் படிப்பவர்கள்
      #  கோயிலில் சந்திப்பவர்கள்
      #  கடைகளில் சந்திப்பவர்கள்
      #  அலுவலகத்தில்  உடன் பணிபுரிபவர்கள்
      #  சக மாணவர்கள்
      #  செய்திதாள் கொடுப்பவர்

                -என்று இன்னும் இப்பட்டியல் தொடர்ந்து கொண்டே செல்லக் கூடியது. நம் வாழ்க்கைக்கு தேவையானவர்களை மட்டும் நம் இதயத்தில் வைப்போம், மற்றவர்களை சாதாரணமாக மூளையில் வைப்போம். நம் பாதை என்றும் சரியாக அமையும். நம் இலக்கு என்றும் தெளிவாக அமையும். ஆம்... நம் இலக்கு நம் கைகளிலே இருக்கட்டும்.

No comments:

Post a Comment